உலக ஆயர் மாமன்ற கூட்டொருங்கிய மாநாட்டின் நிறைவு ஏட்டை மையமாகக் கொண்டு யாழ். மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட செயலமர்வு கடந்த 12ம் திகதி புதன்கிழமை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கனடா ரொறன்ரோ பல்கலைக்கழக பேராசிரியர் அருட்தந்தை சந்திரகாந்தன் அவர்கள் கலந்து கூட்டொருங்கியக்க திரு அவை பற்றிய அறிமுக உரையையும் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் நிறைவு ஏட்டின் முன்னுரை மற்றும் பகுதி ஒன்று பற்றியும், சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல பரிபாலகர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜெகன்குமார் கூஞ்ஞ அவர்கள் அவ்வேட்டின் 2ஆம், 3ஆம் பகுதிகள் பற்றியும், மன்னார் மறைமாவட்ட அருட்தந்தை கிறிஸ்ரி றூபன் பெர்னாண்டோ அவர்கள் பகுதிகள் 4, 5 பற்றியும் விளக்கவுரைகள் வழங்கினார்கள்.
தொடர்ந்து பொது மற்றும் குழுக்கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன் அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டன. இந்நிகழ்வில் மறைமாவட்டத்தில் பணியாற்றும் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பொதுநிலையினர், குருமட மாணவர்களென 450 வரையானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.