கிளிநொச்சி அறிவியல்நகர் பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த கிறிஸ்து அரசர் ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்பு விழா 09ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழக ஆன்மீக இயக்குநரும் கிளிநொச்சி பங்குத்தந்தையுமான அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து புதிய ஆலயத்தை ஆசீர்வதிக்க யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா அவர்கள் அதனை திறந்துவைத்தார்.

தொடர்ந்து ஆயர் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கை பல்கலைக்கழகங்களின் தேசிய ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை றுவான் பெரேரா, யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறை தலைவர் அருட்தந்தை போல் றொகான், யாழ். பல்கலைக்கழக ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை மைக் டொனால்ட், கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பல்கலைக்கழக துறைசார்ந்த பெரியார்கள், ஊழியர்கள், பல்சமய பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், இலங்கை பல்கலைக்கழகங்களின் மாணவர் பிரதிநிதிகள், பங்குமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

இவ்வாலய கட்டுமானப்பணிகள் முன்நாள் பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களால் 2021ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தற்போதைய பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் காலத்தில் நிறைவடைந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin