கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் திருமறைக் கலாமன்றம் தயாரித்து வழங்குகின்ற மாபெரும் அரங்க ஆற்றுகையான ‘கல்வாரி யாகம்’ திருப்பாடுகளின் காட்சி நேற்று ஏப்பிரல் மாதம் 06ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை நான்கு நாட்களுக்கு திருமறைக் கலாமன்ற அரங்கில் இடம்பெறவுள்ளது.
வியாழன், சனி, ஞாயிறு தினங்களில் மாலை 6.45 மணிக்கு ஆரம்பமாகும் திருப்பாடுகளின் காட்சி வெள்ளிக்கிழமை மட்டும் மாலை 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. பிரமாண்டமான அரங்க அமைப்பு, காட்சியமைப்பு, இசையமைப்பு, ஒலி, ஒளி போன்றவற்றுடன் அரங்கிலும் அரங்கப் பின்னணியிலுமாக இருநூறுக்கும் அதிகமான கலைஞர்களுடன் மேடையேற்றப்படவுள்ள ‘கல்வாரி யாகம்’ ஆற்றுகைக்கான ஏற்பாடுகள் இப்பொழுது இடம்பெற்று வருகின்றன.
திருமறைக் கலாமன்ற இயக்குநர் நீ.மரியசேவியர் அடிகளார் திருப்பாடுகளின் நாடகப் பாரம்பரியத்தினை தமிழ் மரபுக்குரிய தனித்துவங்களுடன் வளர்த்து வந்துள்ளார். இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு என்ற மும்மையை மையமாகக் கொண்டு இந்நாடகங்கள் எழுதப்பட்டாலும் அவற்றிற்குள் காலத்திற்கு ஏற்ப பல்வேறு கோணங்களையும் பாடுபொருள்களையும் உட்புகுத்தி இவ் ஆற்றுகைகள் மேடையேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டு மேடையேற்றப்படும் ‘கல்வாரி யாகம்’ திருப்பாடுகளின் நாடகத்திற்கான எழுத்துருவை திருமறைக் கலாமன்றத்தின் பிரதி இயக்குநர் யோ.யோண்சன் ராஜ்குமார் எழுதியுள்ளார். இவ்வாற்றுகை முதன்முதலாக 2002 ஆம் ஆண்டிலும் அதனைத் தொடர்ந்து 2009ஆம் ஆண்டிலும் மேடையேற்றப்பட்டு இவ்வாண்டுடன் மூன்றாவது தடவையாக மேடையேற்றப்படுகின்றது. இம்முறை இதற்கான நெறியாள்கையை மன்றக் கலைஞரான தை.யஸ்ரின் ஜெலூட் மேற்கொண்டுள்ளார்.
ஆண்டுதோறும் திருமறைக் கலாமன்றத்தால் மேடையேற்றப்படுகின்ற திருப்பாடுகளின் காட்சியை பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையிடுகின்றமையும் இலங்கையிலேயே இடம்பெறுகின்ற மிகப்பெரிய அரங்க ஆற்றுகையாக இது அமைகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இறைமகன் இயேசு மானிடர் அனைவரினதும் பாவத்தைக் கழுவ அவர் மனிதனாக பிறந்து, பாவ நிவாரணமாக அவர் தன்னையே தற்கொடையாக்கினார். அவரது பாடுகளும், பிறருக்காக தன்னையே அளிக்கும் தற்கொடையான மரணமும், உயிர்ப்பும் மனித வாழ்வியலுக்குரிய மேல் வரிச்சட்டங்கள். அதனை மீளவும் வலியுறுத்தும் படைப்பாக்கமே ‘கல்வாரி யாகம்’