கரம்பொன் திருக்குடும்ப கன்னியர்மட வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வந்த சிற்றாலயத்தின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அச்சிற்றாலய திறப்புவிழா 02ஆம் திகதி சனிக்கிழமை அங்கு நடைபெற்றது.
கன்னியர்மட முதல்வர் அருட்சகோதரி டிலோசியா மரியதாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் சிற்றாலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.
தொடர்ந்து சிறுவர்களின் கலைநிகழ்வுகளும் அங்கு இடம்பெற்றன. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ். மறைமாவட்ட ஆயர் அவர்களும் சிறப்பு விருந்தினராக யாழ். சுண்டிக்குழி மகளீர் கல்லூரி அதிபர் திருமதி ராஜினி சகாயசீலன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக தீவக மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை றெக்னோ அவர்களும் கரம்பொன் சிறிய புஸ்ப மகளிர் கல்லூரி அதிபர் அருட்சகோதரி மக்டலின் மரியதாசன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் தீவக மறைக்கோட்ட குருக்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், நலன்விரும்பிகள் மற்றும் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டனர்.