கடற்பணியாளர்கள் கடலின் எல்லையற்ற அழகை அனுபவிப்பது மட்டுமல்லாமல், தங்கள் உடல், ஆன்மிகம் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சனைகளையும் அனுபவிக்கிறார்களென ஒருங்கிணைந்த மனித வளர்ச்சிக்கான திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் மைக்கல் செர்னி அவர்கள் தெரிவித்துள்ளார்.
வருடந்தோறும் ஜூலை மாதம் இரண்டாம் ஞாயிறு திருஅவையால் சிறப்பிக்க்பபடும் கடல் ஞாயிறு தினத்திற்கென சுரண்டல்கள் மற்றும் சமத்துவமின்மை போன்றவற்றை கடற்பணியாளர்கள் தங்களுடைய பணிகளில் எதிர்கொள்வதாகவும், பல இலட்சம் மக்கள் பணியாற்றும் இத்துறையில் அவர்களுடைய மறைமுகப் பணிகள் மூலம் நம் அன்றாட தேவைகள் நம்மை வந்தடைவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடற்பணியாளர்களின் வாழ்வு பல இழப்புகளைச் சார்ந்ததாக இருப்பதுடன் அவர்கள் தங்களுடைய குடும்பம் மற்றும் வாழும் நிலத்தைப் பிரிந்து, மாதங்கள் ஆண்டுகளாக கடலில் பணியாற்றுவதால் தம் வாழ்வில் பல இனிமையான தருணங்களை இழப்பதாகவும் தனது செய்தியில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருஅவை வரலாற்றில் கடலோடு தொடர்புடைய நிகழ்வுகளைத் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கர்தினால் அவர்கள், திருத்தூதர் புனித பவுலடியாரின் நற்செய்திப் பணியானது கடல் பயணத்தைச் சார்ந்து அமைந்திருந்ததாகவும்,  துறைமுக நகரமான கொரிந்தில் அவருக்கு பெரிய ஆதரவு இருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளதுடன் இன்று உலகம் முழுவதும் கிறிஸ்தவம் பரவ மிகப்பெரும் வழிமுறையாக கடல் அமைந்திருந்ததை நினைவுகூர்ந்த கர்தினால் செர்னி அவர்கள், கிறிஸ்துவின் நற்செய்தியை திருத்தூதர்கள் மற்றும் மறைத்தூதுவர்களிடமிருந்து முதன் முதலில் பெற்றுக்கொண்ட கடலோரச்சமூகங்களின் வழியாக நாமும் உத்வேகம் பெறமுடியுமெனவும் தெரிவித்துள்ளார்.

By admin