இலங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. சஜித் பிரேமதாச அவர்கள் யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் கடந்த 10ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமையிலான குருக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய நிலை, தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் குறிப்பாக அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப், அவருடன் சென்றவர்கள், வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்தவர்கள், நவாலி தேவாலய படுகொலை போன்ற விடயங்களுக்கான பொறுப்புக்கூறல் மற்றும் யுத்த காலத்தில் தமிழர் பிரதேசத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கான இழப்பீடுகள் வழங்குதல், இவற்றுடன் இணைந்த இனப்பிரச்சனைக்கான தீர்வு, தேர்தலுக்கான பொது வேட்பாளர் நியமனம் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இச்சந்திப்பில் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை மங்களராஜா, அமல மரித்தியாகிகள் சபையின் மாகாண முதல்வர் அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக், மறைக்கோட்ட முதல்வர்கள் மற்றும் அருட்தந்தையர்கள் பலரும் பங்குபற்றியிருந்தனர்.
இச்சந்திப்பில் அருட்தந்தையர்கள் முன்வைத்த விடயங்களில் தாம் கூடுதல் கவனம் செலுத்துவதாகவும், 13ஆம் திருத்தத்தை அமுல்ப்படுத்துவதில் எழும் சவால்களை எதிர்கொள்ள தாம் தயாராக இருப்பதாகவும் எதிர்கட்சி தலைவர் அவர்கள் உறுதியளித்தார்.