நவ.,14,2017. ஈரான் மற்றும் ஈராக் நாடுகளின் எல்லையில், ஞாயிறன்று இரவு இடம்பெற்ற நில நடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் தந்திகள், அவ்விரு நாடுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
ஈரானின் மேற்கு பகுதியில், ஈராக்குடன் இணையும் எல்லைப் பகுதியில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் இதுவரை 440 பேர் வரை இறந்துள்ளதாகவும் 7460 பேர் காயமடைந்துள்ளதாகவும் அப்பகுதியிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செபத்துடன் கூடிய ஒருமைப்பாட்டை தெரிவிப்பதாகவும், இறந்தவர்களுக்காக செபிப்பதாகவும், காயமுற்றோர் மற்றும் அவர்களுடன் பணியாற்றும் அரசு அதிகாரிகளுக்கு இறைவனின் ஆறுதல் நிறைந்த ஆசீரை இறைஞ்சுவதாகவும், திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இந்நாடுகளுக்கு அனுப்பியுள்ள தனித்தனிச் செய்திகள் கூறுகின்றன.