வவுனிக்குளம் அம்பாள்புரம் பிரதேசத்தில் 2008ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினரின் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை கருணாரட்ணம் கிளி அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு 20ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை வவுனிக்குளம் புனித வேளாங்கன்னி ஆலயத்தில் நடைபெற்றது.
அருட்தந்தை ஞானரட்ணம் அவர்களின் ஏற்பாட்டில் பங்குத்தந்தை வரதன் குலாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்கள் தலமைதாங்கி நினைவுத் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.
திருப்பலியை தொடர்ந்து அருட்தந்தையின் கல்லறை ஆயர் அவர்களினால் ஆசீர்வதிக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று அருட்தந்தையின் நினைவாக பயன்தரு மரங்கள் அங்கு நாட்டப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மறைமாவட்டங்களை சேர்ந்த குருக்கள் துறவிகள் இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.