ஆசிய ஆயர் பேரவையின் காலநிலை மாற்றத்திற்கான அவையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சூழலியல் மாநாடு கடந்த 11ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை பிலிப்பைன்ஸ் நாட்டின் தகாய்தே நகரத்தில் நடைபெற்றது.
இயற்கை அனர்த்தங்களை கட்டுப்படுத்தும் காலநிலை மாற்றத்திற்கு ஈடுகொடுக்கும் சிறு குழுமங்களை உருவாக்குவோம் என்னும் கருப்பொருளில் நடைபெற்ற இம்மாநாட்டில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான்,பங்களாதேஸ், நேபாளம், பிலிப்பைன்ஸ், ஜப்பான், வியட்னாம், மலேசியா, இந்தோனேசியா, மியன்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய 12 நாடுகளைச் சேர்ந்த 38 வரையான ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலையினர் பங்குபற்றியதுடன் இலங்கையிலிருந்து யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் மற்றும் இலங்கை கரித்தாஸ் செடெக் நிறுவன இயக்குனர் அருட்தந்தை லூக் நெல்சன் பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இம்மாநாட்டில் மறைமாவட்ட ரீதியாக சுற்றுச்சூழல் மேம்பாட்டு ஆணைக்குழுக்களை உருவாக்குதல், பங்கு ரீதியாக சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழுமங்களை அமைத்தல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடாத்துதல், சுற்றுச்சூழல் தினத்தன்று கரித்தாஸ் செடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் பத்து இலட்சம் மரக்கன்றுகளை நடுதல், திருத்தந்தை அவர்களினால் வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தொடர்பான மடல்களை மொழிபெயர்ப்பு செய்தல் போன்ற தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.