அமலமரித்தியாகிகள் சபை அதி உயர் தலைவர் அருட்தந்தை லூயிஸ் இஞ்ஞாசியோ றோய்ஸ் அலோன்சா அவர்கள் கடந்த மாதம் 14ம் திகதி இலங்கை நாட்டிற்கு வருகைதந்து இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள அமலமரித்தியாகிகளின் பணித்தளங்களை தரிசித்து அங்கு இடம்பெற்ற சிறப்பு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார்.
யாழ். மாகாணத்தில் அமலமரித்தியாகிகள் பணியாற்றும் முல்லைத்தீவு கொக்குளாய், கிளிநொச்சி அக்கராயன், திருகோணமலை இருதயபுரம், மன்னார் கனகராயன் குளம், தட்சனாமருதமடு, அந்தோனியார்புரம் ஆகிய பங்குகளையும் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலம், யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி, யாழ். புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலை, யாழ். போதனா வைத்தியசாலை, அமதிக்கரங்கள் நலநோம்பு மையம், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மலரும் முல்லை கல்வி நிலையம், வவுனியா அமதியகம் மறையுரைஞர் குழு, இயக்கச்சி நேசக்கரங்கள் நிறுவனம், உண்ணாப்புலவு அமதித்தென்றல் உருவாக்கல் நிலையம், கிளிநொச்சி அன்னை இல்லம், முல்லைத்தீவு கொக்கிளாய் கல்விநிலையம், முழங்காவில் அன்பகம், பேசாலை புனித பற்றிமா மத்திய மகா வித்தியாலயம், மன்னார் தோட்டவெளி மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மையம், மன்னார் ஞான உதயம் நவசந்நியாச குருமடம், திருகோணமலை அமல உதயம் மற்றும் கொழும்புத்துறையில் அமைந்துள்ள அமலமரித்தியாகிகள் சபை பெரிய, சிறிய குருமடங்களையும் அமல உற்பவம் வயோதிப குருக்கள் இல்லத்தையும் தரிசித்து அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள், இறைமக்களுடன் கலந்துரையாடினார்.
அத்துடன் கடந்த 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி கனகபுரத்தில் அமைந்துள்ள சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தை தரிசித்து அங்கு சர்வமத தலைவர்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் காணாமல் போன உறவுகளின் அமைப்பு பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதுடன் 28ஆம் திகதி திங்கட்கிழமை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களையும் 29ஆம் திகதி யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.
தொடர்ந்து அன்றைய தினம் கொழும்புத்துறை புனித யூயின் டி மசெனட் சிற்றாலயத்தில் நடைபெற்ற அருட்சகோதரர்கள் றொகான் பீரிஸ், அன்ரன் றெஜினோல்ட் மற்றும் கிறிஸ்ரின் குருஸ் ஆகியோரின் நித்திய வார்த்தைப்பாட்டு திருச்சடங்கிலும் பங்குபற்றினார்.
தொடர்ந்து 30ஆம் திகதி தொடர்பகம் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தையர்களுடன் கலந்துரையாடியதுடன் 31ம் திகதி வியாழக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் இடம்பெற்ற அமலமரித்தியாகிகள் சபை திருத்தொண்டர்கள் குளோட் மரினோ மற்றும் டிலுசன் பியுமால் ஆகியோரின் குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்குகளிலும் கலந்துகொண்டு மீண்டும் 02ஆம் திகதி கடந்த சனிக்கிழமை தனது நாடு திரும்பினார்.