கார்த்திகை மாதம் 02ஆம் திகதி இறந்த அனைத்து விசுவாசிகளையும் சிறப்பான முறையில் நினைவுகூர்ந்து அவர்களுக்காக செபிக்கும் நாள்.

அன்றைய நாளில் யாழ். மறைமாவட்டத்தின் பல பங்குகளிலும் மக்கள் கல்லறைப்பூங்காக்களை தரிசித்து அங்கு நடைபெற்ற திருப்பலிகளில் பங்குபற்றி இறந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபித்தனர்.

யாழ். புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இத்திருப்பலியில் மறையுரையாற்றிய யாழ். மறைக்கோட்ட முதல்வரும் பேராலய பங்குத்தந்தையுமான அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்கள் சேமக்காலையின் மேன்மையை வலியுறுத்தி இவ்விடத்தை குற்றச்செயல்கள் மற்றும் துஸ்பிரயோகங்கள் புரியும் இடமாக மாற்றாது இதன் துப்பரவையும் புனிதத் தன்மையையும் பேண அனைவரும் ஒத்துழைக்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் இச்சேமக்காலையின் புனிதத்தன்மையை பேணும் முகமாகவும் பலரின் வேண்டுகோளுக்கமைவாகவும் இதன் முகப்பில் புனித கொஞ்சேஞ்சி மாதா மறுவாழ்வு முற்றம் – உத்தான பூமி, St. Mary’s Garden of eternal life என பெயரிடப்பட்ட பெயர்பலகையும் உயிர்த்த ஆண்டவர் திருச்சொருபமும் வைக்கப்பட்டுள்ளதென தெரிவித்தார்.

இத்திருப்பலியில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், குருமட மாணவர்கள், இறைமக்களென பலரும் கலந்து இறந்த விசுவாசிகளுக்காக செபித்தனர்.

By admin