மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள கனிய மண் அகழ்வு மற்றும் 2ஆம் கட்ட காற்றாலை அமைப்பு திட்டங்களை கண்டித்து மன்னார் மாவட்டத்தில் இயங்கும் சிவில் சமூக அமைப்பினர் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருவதடன் இத்திட்டங்களினால் மன்னார் தீவும் இங்குவாழும் மக்களும் எதிர்நோக்கக்கூடிய பாதகமான விளைவுகளையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசாங்கத்தின் அனுமதியுடன் தனியார் நிறுவனங்களினால் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் கடந்த 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட மன்னார் பிரஜைகள் குழு மற்றும் மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் இதற்கு எதிராக கடும் கண்டணத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
மன்னார் மாவட்டச் செயலகத்தில மாவட்ட அரச அதிபர் திரு. கனகேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் பிரதியமைச்சரும் அபிவிருத்தி குழுத்தலைவருமான திரு. உபாலி சமரசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய பல்வேறு விடயங்கள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் விசேடமாக கலந்துரையாடப்பட்டன.
குறிப்பாக 2ஆம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாகவும் மன்னார் தீவு பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற கனிய மணல் அகழ்வு குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
எனினும் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட மன்னார் பிரஜைகள் குழு மற்றும் மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள்; தமது கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததோடு மன்னார் மாவட்ட மக்கள் மன்னார் தீவு பகுதியில் முன்னெடுக்கப்படும் கனிய மணல் அகழ்வை எதிர்ப்பதாகவும் குறித்த விடயம் தொடர்பாக இங்கு ஆராயப்பட வேண்டிய தேவையில்லை எனவும் சுட்டிக்காட்டி மன்னார் தீவில் கனிம மண் அகழ்வுக்கு ஒரு போதும் அனுமதியை வழங்க முடியாதெனவும் தெரிவித்தனர்.
இதன்போது மக்களின் எதிர்ப்பை மீறி மாவட்டத்தில் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்க அனுமதி வழங்க முடியாதெனவும் குறிப்பாக மன்னார் தீவு பகுதியில் முன்னெடுக்கப்படும் கனிம மண அகழ்வு குறித்து மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமையினால் இவ்விடயம் தொடர்பாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஜனாதிபதியை சந்தித்து குறித்த விடையம் தொடர்பாக கலந்துரையாட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
தொடர்ந்து 29ஆம் திகதி பிரஜைகள் குழு மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றியத்தினருக்கும் சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலைய அமைப்பினருக்கு மிடையிலான கலந்துரையாடலும் நிறைவில் ஊடக சந்திப்பும் நடைபெற்றது. இச்சந்திப்பில் பிரஜைகள் குழு தலைவர் அருட்தந்தை மார்க்கஸ், பொது அமைப்புக்கள் தலைவர் சிவகரன் மற்றும் ஆலோசகர் அருட்தந்தை ஜெயபாலன் குருஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.