மன்னார் மறைமாவட்டத்திலுள்ள பள்ளிமுனைப்பங்கில் பாரம்பரியமாக முன்னெடுக்கப்பட்டுவரும் அந்தோனியார் வரலாற்று நாடகம் கடந்த 18ஆம் 19ஆம் திகதிகளில் அங்கு நடைபெற்றது.
பள்ளிமுனை பங்கின் பங்குத்தந்தை அருட்தந்தை டெனி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புனித லூசியா ஆலய மக்களால் முன்னெடுக்கப்பட்ட இப்பாரம்பரிய ஆற்றுகை நிகழ்வு பள்ளிமுனை மைதானத்தில் நடைபெற்றது.
வாசாப்பு, நாட்டுக்கூத்து போன்ற அளிக்கைமுறைகளைக் கொண்டமைந்த இப்பாரம்பரிய ஆற்றுகை ஐந்து வருடங்களுக்கொருமுறை இங்கு நடைபெற்றுவருகின்றது.
இரண்டு நாள் இரவு முழுவதும் நடைபெற்ற இவ்வாற்றுகையின் ஆரம்ப நாளில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெனான்டே அவர்களும் மன்னார் மாவட்ட அரச அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் அவர்களும் இரண்டாம் நாள் நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்களும் பிரதம விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.