இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்கள அரச இலக்கிய ஆலோசனைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்வு கடந்த 27ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு அலரி மாளிகையில் நடைபெற்றது.
இலக்கிய பரப்பில் நாவல் இலக்கியம், சிறுகதைத் தொகுப்பு, கவிதை இலக்கியம், நாடக இலக்கியம், சிறுவர் இலக்கியம், புலமைத்துவ மற்றும் ஆய்வுசார் படைப்பு, நானாவித இலக்கியம், இளையோர் இலக்கியம், இலக்கிய திறனாய்வு, பாடலாக்கம், அறிவியல் புனைகதை, மொழிபெயர்ப்பு நாவல், மொழிபெயர்ப்பு சிறுகதை போன்ற தளங்களில் 2023ம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல்களின் மதிப்பீட்டுக்கு அமைவாக நூல்களை எழுதியவர்களுக்கான விருதுகள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அருட்தந்தை ஞானமுத்து பிலேந்திரன் அவர்கள் ஆய்வு நூலுக்கான சிறந்த நூற்பரிசான ‘சாகித்ய’ விருதை பெற்றுக்கொண்டார்.
அருட்தந்தை பிலேந்திரன் அவர்களால் எழுதப்பட்ட ‘போர்த்துக்கேயரின் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் கத்தோலிக்கம்’ எனும் நூல் 2023ஆம் ஆண்டின் சிறந்த புலமைத்துவ மற்றும் ஆய்வுசார் படைப்பாக தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் இது போர்த்துக்கேயர் ஆட்சிக்கால கத்தோலிக்கம் பற்றி வெளிவந்த முதல் ஆய்வியல் நூல் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.